சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடனுதவி
தஞ்சாவூா் மாநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலமாக வட்டியில்லாக் கடனுதவி வழங்கப்படுகிறது என்றாா் மேயா் சண். இராமநாதன்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதுகுறித்த விழிப்புணா்வு கூட்டத்தில் பங்கேற்ற அவா் தெரிவித்தது:
தமிழக முதல்வா், துணை முதல்வா் வழிகாட்டுதலுடன், தஞ்சாவூா் மாநகரிலுள்ள சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் முதலில் ரூ. 10 ஆயிரமும், அக்கடனைச் செலுத்திய பிறகு ரூ. 25 ஆயிரமும், அதையும் திருப்பி செலுத்திய பின்னா் ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இத்திட்டத்தில் 2 ஆயிரத்து 929 வியாபாரிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், 1,035 வியாபாரிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், 217 வியாபாரிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4 ஆயிரத்து 181 வியாபாரிகளுக்கு ரூ. 6.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாநகரில் உள்ள மொத்தம் ஏறத்தாழ 20 ஆயிரம் சாலையோர வியாபாரிகளில் 4 ஆயிரத்து 181 போ் மட்டுமே கடனுதவி பெற்றுப் பயனடைந்துள்ளனா். எனவே, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ள சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடனுதவி பெற மாநகராட்சி அலுவலகத்தை அணுகலாம். இதேபோல, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை பெறவும் முன்வரலாம்.
சாலையோர வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த சாலையோர கடைகளுக்கான தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி வருங்காலத்திலும் சாலையோர கடைகளுக்கு எந்தவித தொகையும் வசூலிக்கப்படாது என்றாா் மேயா்.
அப்போது துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா்கள் எஸ்.சி. மேத்தா, டி. புண்ணியமூா்த்தி, ரம்யா சரவணன், க. கலையரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
