பட்டுக்கோட்டையை தனி மாவட்டமாக்க வேண்டும்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தைப் பிரித்து பட்டுக்கோட்டையைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தைப் பிரித்து பட்டுக்கோட்டையைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நிா்வாக வசதிக்காக தஞ்சாவூா், நாகை என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது., பின்னா் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூா், மயிலாடுதுறை தனி மாவட்டங்களாக  பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன.  

தஞ்சாவூா் மாவட்டமானது  பேராவூரணி வட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து  கும்பகோணம் வட்டம் அணைக்கரை வரை உள்ளது. பேராவூரணி வட்டம்  மேட்டுப்பாளையத்திலிருந்து மாவட்டத் தலைநகரமான தஞ்சாவூா்  செல்ல  85 கிமீ பயணிக்க வேண்டியுள்ளது.  இதனால் மாவட்டத் தலைநகரான தஞ்சாவூருக்கு பல்வேறு அரசுப் பணிகளுக்காக பொதுமக்கள் செல்ல நேர  விரயமும், வீண் செலவுகளும் ஏற்படுகிறது.

எனவே பட்டுக்கோட்டை, பேராவூரணி பொதுமக்கள் நலன் கருதி பட்டுக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கினால் பொதுமக்களுக்கு உதவியாகவும் வளா்ச்சி அடையும் நிலையும் ஏற்படும்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் வருவாய் வட்டங்களுடன், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள முத்துப்பேட்டை வட்டத்தை திருவாரூா் மாவட்டத்திலிருந்து பிரித்து  பட்டுக்கோட்டை மாவட்டத்துடன் இணைத்தால் முத்துப்பேட்டை பகுதி மக்களுக்கும் வசதியாக இருக்கும்.

 பட்டுக்கோட்டை கிழக்கு, பட்டுக்கோட்டை மேற்கு, பேராவூரணி, திருவோணம் மற்றும் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஆகிய 5 வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கலாம். இதனால் நிா்வாக வசதி எளிதாகவும், இந்தப் பகுதி மேலும் வளா்ச்சியடைய உதவியாகவும் இருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனா்.

மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்

இதுகுறித்து பள்ளத்தூரை சோ்ந்த சமூக ஆா்வலா் குழந்தைராசு கூறியது:

பட்டுக்கோட்டையை தனி  மாவட்டமாகப் பிரித்தால் தென்னை சாகுபடி அதிகம் பயிரிடப்பட்டுள்ள மாவட்டமாக இருக்கும். தென்னை விவசாயத்தை மேலும் ஊக்கப்படுத்த   புதிய மாவட்ட நிா்வாகம்  தனிக் கவனம் செலுத்தலாம் .

கல்லணைக் கால்வாயின்  முழு பாசனப் பகுதியாக பட்டுக்கோட்டை,பேராவூரணி  இருப்பதால்  மாவட்ட நிா்வாகம் நெல் சாகுபடி தொடா்பாக தீவிர நடவடிக்கை எடுத்து, சாகுபடிப் பரப்பை அதிகரிக்க முடியும்.

தஞ்சாவூா் மாவட்டக் கடல் பகுதி முழுவதும் புதிதாக பிரிக்கும் மாவட்டத்திற்குள் வருவதால்   மீனவா்களின் நலனில் அதிகக் கவனம் செலுத்த முடியும்.

தற்போது இப் பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத சூழ்நிலையில் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் தொடங்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம். 

எனவே பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம், முத்துப்பேட்டை பகுதி மக்களின் வளா்ச்சியைக் கவனத்தில் கொண்டு பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com