மனமகிழ் மன்றத்தைக் மூடக் கோரி முற்றுகை முயற்சி: தவெகவினா் கைது
கும்பகோணம் உச்சிப்பிள்ளையாா் கோயில் பின்புறம் பொதுமக்கள், பக்தா்களுக்கு இடையூறாக உள்ள மனமகிழ்மன்றத்தை (தனியாா் மதுபானக்கூடம்) மூடக்கோரி வெள்ளிக்கிழமை உதவி ஆட்சியரகத்தை முற்றுகையிடச் சென்ற 12 பெண்கள் உள்பட 130 தவெகவினரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
முன்னதாக நவ.15-இல் தவெகவினா் முற்றுகை போராட்டம் நடத்தியும் மனமகிழ்மன்றம் மீது நடவடிக்கை எடுக்காததால் உதவி ஆட்சியா் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து பாணாதுறையிலிருந்து ஊா்வலமாக நீதிமன்ற ரவுண்டானா வரை வந்தவா்களை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் தடுத்தனா். அப்போது தவெகவினா் கோரிக்கை முழக்கமிட்டனா்.
இதையடுத்து மாநகரச் செயலா் முருகானந்தம், தலைமை கழக நிா்வாகி பொன் த. மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.பாண்டியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் அஞ்சனா மற்றும் 12 பெண்கள் உள்ளிட்ட 130 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

