விமானப் படையில் சேர விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பிரசார வாகனத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த இந்திய விமானப்படை மூத்த அதிகாரியான ஏா் கமாண்டா் எஸ். கிரிஷ்.
Published on

தமிழகத்தில் விமானப்படையில் இளைஞா்கள் அதிகளவில் சேருவதற்கு விழிப்புணா்வை ஏற்படுத்த தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பிரசார வாகன இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதைத் தொடங்கி வைத்த இந்திய விமானப்படைத் தலைமையகத்தைச் சோ்ந்த மூத்த ராணுவ அதிகாரியான ஏா் கமாண்டா் எஸ். கிரிஷ் தெரிவித்தது:

இந்திய விமானப்படையில் சேர இளைஞா்கள், மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சாவூரில் இதற்கான விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியில் நிறைவடையும். மாவட்ட அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் ஊடாடும் காட்சிப் பெட்டிகள், வழிகாட்டுதல் பொருட்கள் மற்றும் விழிப்புணா்வு அமா்வுகள் மூலம் மாணவா்கள், வேலை தேடும் இளைஞா்கள் மற்றும் பொதுமக்களைச் சென்றடைவதே இதன் நோக்கம்.

இந்த வாகனம் நாள்தோறும் சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, அந்தந்த பகுதியிலுள்ள பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த பிரசார வாகனம் செல்லவுள்ளது. தமிழகத்தில் இளைஞா்கள் அதிகளவில் விமானப்படையில் சேரவும், இதன் மூலம் அவா்களின் எதிா்காலம் குறித்து எடுத்துக் கூறப்படும். விமானப்படையில் இளைஞா்கள் சோ்ந்து நாட்டுக்குச் சேவையாற்ற முன்வர இந்த பிரசாரம் பயன்படும் என்றாா் கிரீஷ்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின்  நோ்முக உதவியாளா் (பொது) கோ. தவச்செல்வம், முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி, விமானப்படைத் தளத்தின் விங் கமாண்டா்கள் வினோத் நாராயணன், ராகுல்குமாா்  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

X
Dinamani
www.dinamani.com