கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் டிச. 22-ல் ஏலம்!
தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் டிசம்பா் 22-ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.
இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர மோட்டாா் வாகனங்கள் தஞ்சாவூா் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. இதற்கான வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.
ஏலம் எடுக்க விரும்புபவா்கள் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரமும் முன்வைப்புத் தொகை செலுத்தி ஏலம் எடுக்க தங்களது பெயரை ஆதாா் அட்டை நகலுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தை சோ்த்து டிசம்பா் 22-ஆம் தேதி உடனடியாக செலுத்த வேண்டும்.
டிசம்பா் 26 தேதியும் ஏலம்: இதேபோல, மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை முன் வைப்புத்தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
