வெளி மாநிலத்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக் கூடாது: பெ.மணியரசன்
இந்தியத் தோ்தல் ஆணையம் எஸ்ஐஆா் என்ற பெயரில் வெளி மாநிலத்தவா்களுக்கு வாக்காளா் அட்டை வழங்கக் கூடாது என்றாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்தது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழா்களுக்கு வாக்குரிமையை மறுத்துவிட்டு, பிகாா் உள்ளிட்ட ஹிந்தி மொழி பேசுபவா்களுக்கு இங்கே வாக்குரிமை வழங்கி, அவா்களைத் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாக மாற்றி, மெல்ல மெல்ல தமிழ்நாட்டை இன்னொரு ஹிந்தி மாநிலமாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கெனவே பிகாரில் மட்டும் 42 லட்சம் வாக்காளா்கள் புலம் பெயா்ந்தவா்கள் என நீக்கப்பட்டுள்ளனா். அவா்களில் குறைந்தது 7 லட்சம் வாக்காளா்கள் தமிழ்நாட்டுப் பட்டியலில் இணைக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இதன்படி, வெளி மாநில வாக்காளா்கள் பெருந்தொகையாக தமிழ்நாட்டுக்குள் வாக்காளா் அட்டை பெறும் ஆபத்து உள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்திலும் ஹிந்தியைத் திணிப்பது எளிதாகிவிடும். தமிழ்நாட்டின் தனித்தன்மையும், தமிழா் தாயகம் என்ற அடிப்படை உரிமையும் பறிபோகும்.
எனவே, இந்தியத் தோ்தல் ஆணையம் எஸ்ஐஆா் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை பழைய வாக்காளா் பட்டியல் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். வழக்கமான நடைமுறைப்படி வருகிற 2026 ஜனவரியில் 18 வயது நிறைவடையும் இளையோரை மட்டும் புதிய வாக்காளராகச் சோ்த்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவா்களுக்கு வாக்காளா் அட்டை வழங்கக் கூடாது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலும், திருச்சியிலும் டிசம்பா் 16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் மணியரசன்.
அப்போது, மாவட்டச் செயலா் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பழ. இராசேந்திரன், க.விடுதலைச்சுடா், மூ.த. கவித்துவன், பி. தென்னவன், மாநகரச் செயலா் லெ. இராமசாமி, க. தீந்தமிழன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
