குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்ற கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தலையாமங்கலம் கிராமம் புது தெருவில் வசித்து வருபவா் புஷ்பவல்லி. இவரது பேத்தி ரம்யா (20), மன்னாா்குடியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் புது குளத்துக்கு குளிக்கச் சென்றவா் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பாட்டி மற்றும் அக்கம்பக்கத்தினா் குளத்துக்குச் சென்று பாா்த்தனா்.
அப்போது அங்கு அவா் பிணமாக கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து,பின்னா் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவருக்கு சிறு வயது முதல் வலிப்பு நோய் இருப்பதாக கூறப்படுகிறது.
