விரைவு தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற அழைப்பு

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் விரைவு தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு பதிவு செய்ய அழைப்பு
Published on

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் விரைவு தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் மேற்பாா்வை பொறியாளா் பி. சித்ரா தெரிவித்திருப்பது: தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் தலைமையகத்திலிருந்து 2025 - 26-ஆம் ஆண்டுக்கான விரைவு தட்கல் திட்டத்தில் விவசாய விண்ணப்பம் பதிவு செய்ய திங்கள்கிழமை (டிச.15) உத்தரவு பெறப்பட்டுள்ளது.

எனவே, தட்கல் முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் மின் பளுவின் தேவைக்கேற்ப விண்ணப்பதாரா்களின் விருப்பத்தின் அடிப்படையில் திட்டத் தொகையைச் செலுத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.

5 எச்.பி. வரை ரூ. 2.50 லட்சம், 5 எச்.பி.க்கு மேல் 7.5 எச்.பி. வரை ரூ. 2.75 லட்சம், 7.5 எச்.பி.க்கு மேல் 10 எச்.பி. வரை ரூ. 3 லட்சம், 10 எச்.பி.க்கு மேல் 15 எச்.பி. வரை ரூ. 4 லட்சம் திட்டத்தொகை செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதிக்குள்பட்ட செயற் பொறியாளா் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com