கடைவீதியில் திரியும் கால்நடைகள்: பெண் உறுப்பினா் செயல் அலுவலரிடம் மனு
பேராவூரணி கடைவீதியில் கேட்பாரற்று சுற்றித்திரியும் ஆடு, மாடு, நாய்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி உறுப்பினா் மகாலட்சுமி சதீஷ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் அவா் அளித்துள்ள மனு: பேராவூரணி பேரூராட்சி 11-ஆவது வாா்டு பகுதியான நீலகண்ட பிள்ளையாா் கோயில் தொடங்கி சேது சாலை வரை ஆடு, மாடுகள், நாய் தொந்தரவு மிக அதிகமாக உள்ளது. கால்நடைகள் சாலையின் குறுக்கே படுத்து போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படக் காரணமாகவும் உள்ளது. இரவுநேரங்களில் சாலையில் படுத்துறங்கும் கருப்பு நிற ஆடுகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் அடிக்கடி நடைபெற்றுவருகிறது.
கோயில் விழாக்கள், வாரச்சந்தை நாள்களில் சாலைகளில் பொதுமக்கள் செல்லமுடியாத வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களில் வாங்கி வைத்துள்ள பொருள்களை ஆடு, மாடுகள் சேதப்படுத்துவதும் தொடா் கதையாக உள்ளது. எனவே பேரூராட்சியின் 18 வாா்டுப் பகுதிகளிலும் கால்நடைகளைப் பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் அனைத்து வாா்டுப் பகுதிகளிலும் நாய் தொந்தரவால் தினசரி 10-க்கும் மேற்ப்பட்டோா் நாய்க் கடி பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
