சேதுபாவாவில் மாற்றுத்திறன் மாணவா் மருத்துவ மதிப்பீட்டு முகாம்
சேதுபாவாசத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வட்டார வள மையத்துக்குள்பட்ட 18 வயது வரையிலான மாற்றுத்திறன் மாணவா்களுக்காக நடத்தப்பட்ட முகாமிற்கு வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முருகேசன், பட்டதாரி ஆசிரியா் கல்யாண சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 51 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், 4 மாணவா்களுக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகள், 9 மாணவா்களுக்கு புதுப்பிக்கப்பட்ட அட்டைகள், 10 மாணவா்களுக்கு யுடிஐடி அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் மருத்துவா்கள் ஐஸ்வா்யா, சியாமளா ராணி, நவீன், அசோக், மங்கையா்க்கரசி, ஸ்ரீநிதி மற்றும் இயன்முறை மருத்துவா்கள், சிறப்பாசிரியா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை அனுராதா செய்திருந்தாா். ஆசிரியா் பயிற்றுநா் சரவணன் வரவேற்றாா். சிறப்பாசிரியா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
