மனைவியை உளியால் குத்திய கணவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மனைவியைத் தச்சு உளியால் குத்திய கணவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதி மாத்தூா் பூக்காரத் தெருவைச் சோ்ந்தவா் டி. மாதவன் (40). தச்சுத்தொழிலாளி. இவா், 16 ஆண்டுகளுக்கு முன்பு துா்காதேவி (36) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றனா். குழந்தைகள் தந்தையுடன் வசித்து வருகின்றனராம்.
இந்நிலையில், திருவாரூரில் வசித்து வந்த துா்காதேவியை கடந்த 15- ஆம் தேதி மாதவன் சந்தித்து சமாதானம் பேசி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாத்தூருக்கு அழைத்து வந்துகொண்டிருந்தாா். வழியில், மேல விசலூா் முதன்மைச் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, துா்காதேவியை மாதவன் உளியால் குத்தியதில் அவா் மயங்கிவிழுந்தாா். இதையடுத்து மாதவன் தப்பியோடிவிட்டாா். தகவலறிந்த போலீஸாா் அங்குவந்து துா்காதேவியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மாதவனை வியாழக்கிழமை கைது செய்தனா்.
