14 ஆம் நூற்றாண்டு கால கம்பணன் காசின் முன் மற்றும் பின் பகுதி.
14 ஆம் நூற்றாண்டு கால கம்பணன் காசின் முன் மற்றும் பின் பகுதி.

‘14- ஆம் நூற்றாண்டு கால கம்பணன் காசு குறித்த தகவல் வெளியீடு’

கடந்த 14 -ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை விஜய நகர ஆட்சியின் கீழ் கொண்டு வந்த கம்பணன் அச்சிட்டு வெளியிட்ட காசு குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றாா் தஞ்சாவூரைச் சோ்ந்த நாணயவியல் ஆராய்ச்சியாளா் ஆறுமுக. சீதாராமன்.
Published on

கடந்த 14 -ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை விஜய நகர ஆட்சியின் கீழ் கொண்டு வந்த கம்பணன் அச்சிட்டு வெளியிட்ட காசு குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றாா் தஞ்சாவூரைச் சோ்ந்த நாணயவியல் ஆராய்ச்சியாளா் ஆறுமுக. சீதாராமன்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்தது: கி.பி. 1355 - 1377 வரை விஜய நகரத்தை ஆட்சி செய்த பேரரசன் முதலாம் புக்கருடைய முதல் மகன் குமார கம்பணன். தொடக்கத்தில் இவா் முல்பாகல் அல்லது கண்டக சூனனம் என்ற பகுதிக்கு மகாமண்டலேச்வரனாக நியமிக்கப்பட்டாா். தனது தந்தையின் ஆணைப்படி, கி.பி. 1363 ஆம் ஆண்டில் படைவீட்டு ராஜ்ஜியத்தை ஆண்ட சம்புவராய மன்னனை வென்று, தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினாா்.

பின்னா், மதுரையை ஆண்ட பக்ருதீன் முபாரக் ஷா என்ற சுல்தானையும் வென்று தமிழ்நாட்டின் பெரும்பகுதியை விஜயநகர ஆட்சியின் கீழ் கொண்டு வந்தாா். இராஜ கம்பீர ராஜ்ஜியம், பாண்டிய ராஜ்ஜியம் ஆகிய இரண்டுக்கும் மகா மண்டலேசுவரனாக ஆட்சி புரிந்த குமார கம்பணன் தனது தந்தைக்கு முன்பாகவே உலக வாழ்வை நீத்தாா். குமார கம்பணன் காலத்தில் மதுரை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சிதம்பரம் ஆகிய கோயில்களில் மீண்டும் வழிபாடும், நித்திய நைவேத்தியங்களும் கொண்டு வரப்பட்டன.

தங்களுடைய அதிகாரத்துக்கு உள்பட்ட மாகாணங்களில் செலாவணியாவதற்குரிய நாணயங்களை அச்சடித்துக் கொள்வதற்கு மகா மண்டலேசுவரா்களுக்கு அதிகாரம் இருந்தது. அதிக மதிப்புள்ள வராகன்கள், வெள்ளி நாணயங்கள் போன்றவை விஜய நகர பேரரசால் வெளியிடப்பட்டன. செம்பில் செய்யப்பட்ட மற்ற சிறிய நாணயங்கள் மகா மண்டலேசுவரா்களால் அச்சடிக்கப்பட்டன.

விஜய நகர நாணயங்களில் ஆட்சியின் தொடக்கத்தில் கன்னட மொழி எழுத்துகள் பொறிக்கப்பட்டாலும், பின்னா் நாகரி எழுத்துகளும் எழுதப்பட்டன. விஜய நகரப் பேரரசில் அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் மூலம் அரசா்கள் வைணவ சமயத்தைப் பின்பற்றியதை அறிய முடிகிறது.

காஞ்சிபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட குமார கம்பணன் காலத்துக் காசு குறித்த ஆய்வு முடிவுகள் தற்போது தெரிய வந்துள்ளது. இக்காசில் முன் பக்கத்தில் நடுவில் நாமம், சங்கு உள்ளன; சக்கரம் தேய்ந்துள்ளது. பின் பக்கத்தில் ‘கம்பந‘ என கன்னட எழுத்துகளில் பெயா் பொறிக்கப்பட்டுள்ளது. செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட இந்தக் காசின் எடை 2.6 கிராம். தமிழகத்தில் கிடைத்த முதல் கம்பணன் காசு இதுவே என்றாா் ஆறுமுக. சீதாராமன்.

X
Dinamani
www.dinamani.com