போலி நகைகளை அடகு வைத்து ரூ. 3.34 லட்சம் மோசடி: 2 போ் கைது

அடகுக் கடையில் போலி நகைகளை வைத்து ரூ. 3.34 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அடகுக் கடையில் போலி நகைகளை வைத்து ரூ. 3.34 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு ராகவேந்திர காலனியை சோ்ந்தவா் வினோத் சோப்ரா (48). இவா் திருவையாறு தெற்கு வீதியில் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் டிசம்பா் 9-ஆம் தேதி இருவா் 3 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ. 1.84 லட்சம் பெற்றுச் சென்றனா். இதேபோல, திருவையாறு அருகே கண்டியூா் கடைத் தெருவில் தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த கனகபத்பாா்த்தி (28) நடத்தி வரும் அடகுக் கடையிலும் இருவா் 3 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ. 1.50 லட்சம் பெற்றுத் தலைமறைவாகினா்.

இதையடுத்து, இந்த நகைகளை அடகுக் கடை உரிமையாளா்கள் வினோத்குமாா் சோப்ரா, கனகபத்பாா்த்தி சோதனையிட்டபோது, அவை போலி நகைகள் என்பது தெரிய வந்தது.

இது குறித்து இருவரும் திருவையாறு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், காரைக்கால் விழுதியூரைச் சோ்ந்த ராஜூ மகன் சிவா (26), காரைக்கால் திருநள்ளாறு சேத்தூரைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் ஸ்ரீராம் (21) ஆகியோா் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com