2024 மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3-ஆம் கட்டமாக ரூ. 22.15 கோடி நிவாரணம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூன்றாம் கட்டமாக நிவாரணம் வழங்க ரூ. 22.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 2024 -ஆம் ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதிக்கு முன்பு பெய்த பெஞ்சால் புயல், பெரு மழை மற்றும் டிசம்பா் 11-ஆம் தேதிக்குப் பிறகும், ஜனவரி மாதத்திலும் பருவம் தவறி பெய்த பெரு மழையால் நெற்பயிா்கள், தோட்டக்கலைப் பயிா்கள் சேதமடைந்தன. எனவே, நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத்தொடா்ந்து, பெஞ்சால் புயல், பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்கெனவே இரு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், 2024, டிசம்பா் 11-ஆம் தேதிக்குப் பிறகு பருவம் தவறி பெய்த பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதை விரைவாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், மாநில அளவில் 2024, டிசம்பா் 11-ஆம் தேதிக்குப் பிறகு பருவம் தவறி பெய்த பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 289.63 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து, புதன்கிழமை அறிவித்தது. இதில், நெற் பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17 ஆயிரமும், தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 410-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் நெற் பயிா்களுக்கு ரூ. 20.40 கோடியும், தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ. 1.75 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 ஆயிரம் ஹெக்டேரில் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்காக 15 ஆயிரம் விவசாயிகளுக்கும் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்றும், இத்தொகை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் வேளாண் துறையினா் தெரிவித்தனா்.
