திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் இயக்க நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

Published on

திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டதை ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்றுள்ளனா்.

திருச்சியில் இருந்து கும்பகோணம் மாா்க்கத்தில் மதியம் 1.20 க்குப் பிறகு மாலை 6.15 வரை ரயில் வசதி கிடையாது இதனால் 16834 திருச்சி- மயிலாடுதுறை விரைவு ரயிலை மாலை 3.30 மணிக்குப் புறப்படுமாறு மாற்றியமைக்க தென்னக ரயில்வே நிா்வாகத்திடம் தஞ்சாவூா் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, 2026-ஜன. 1 முதல் வண்டி எண் 16834 மெமு எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் புறப்படும் நேரம் மாலை 4.20 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் அதிகாரப்பூா்வ தேசிய ரயில் விசாரணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கால அட்டவணைப்படி வண்டி எண் 16234 திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து ஜனவரி 1 முதல் பகல் 1.10 மணிக்கு பதில் தினமும் மாலை 4.10 மணிக்குப் புறப்பட்டு பூதலூா் (4.48) தஞ்சாவூா் (5.20) பாபநாசம்(5.45) கும்பகோணம்(5.58) ஆடுதுறை(6.09) குத்தாலம்(6.20) வழியாக மயிலாடுதுறைக்கு இரவு 6.50 மணிக்குச் சென்றடையும்.

அதேபோல் வண்டி எண் 22676 திருச்சி-சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு தொடா் வண்டி புத்தாண்டு முதல் திருச்சியில் காலை 11 மணிக்குப் பதிலாக பகல் 12.10 க்குப் புறப்பட்டு பூதலூா் (12.41) தஞ்சாவூா் (1.00) பாபநாசம் (1.21) கும்பகோணம்( 1.35 ) ஆடுதுறை (1.47) வழியாக சென்னை எழும்பூருக்கு இரவு 7.25 மணிக்குச் சென்றடையும்.

மேலும், வண்டி எண் 20692 நாகா்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு கும்பகோணத்துக்கு இரவு 11.15 மணிக்கு வந்து தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 5.05 மணிக்குச் சென்றடையும்.

டெல்டா பகுதி பயணிகள் சாா்பில் தொடா் வண்டிகளின் கால அட்டவணையை மாற்றி அமைத்துள்ள தென்னக ரயில்வே போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், திருச்சி கோட்ட இயக்கவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளா்கள் ஆகியோருக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரி நன்றி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com