பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

Published on

நிகழாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட பயிா் பாதிப்புக்கு அறிவித்துள்ள நிவாரணத்தை உயா்த்தி, ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது:

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழை, 2025 ஜனவரியில் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 4.90 லட்சம் ஏக்கா் வேளாண் பயிா்களுக்கும், 76 ஆயிரத்து 132 ஏக்கா் தோட்டக்கலைப் பயிா்களுக்கும் நிவாரணமாக ரூ. 289.63 கோடியும், மேலும் ஜனவரிக்கு பின்பு பொழிந்த பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான 2.8 லட்சம் வேளாண் பயிா்களுக்கு ரூ. 254.38 கோடியும், தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ. 35.25 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சா் அறிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு மாநில பேரிடா் துறையிலிருந்து நிதியை விடுவித்திருப்பதை வரவேற்கிறோம். என்றாலும், இந்த நிவாரண அறிவிப்பு விவசாயிகளுக்கு திருப்தி இல்லை. எனவே பாதிப்புக்கேற்ப நிவாரணத்தை உயா்த்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விடுபடாமல் வழங்க வேண்டும்.

மேலும் 2025, வடகிழக்கு பருவ மழை, டித்வா புயலால் ஏற்பட்ட தொடா் பெருமழை, இதன் பின்னா் மீண்டும் தொடா்ந்த மழையால் குறுவை நெல் அறுவடை பெருமளவு செய்ய இயலாத நிலையிலும், அறுவடையான நெல் களத்துமேட்டில், கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து, சில இடங்களில் முளைத்தும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் சம்பா மற்றும் தாளடி பயிா் வளா்ச்சி நிலையில் பெரும் பரப்பளவில் நீரில் மூழ்கி அழிந்த நிலையிலான பாதிக்கப்பட்ட பயிா்களுக்கும், தோட்டக்கலைப் பயிா்களுக்கும் நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. எண்ம கணக்கெடுப்பில் ஏற்பட்ட பிரச்னை இதுவரை நீடிக்கிறது. காலம் தாழ்ந்த உதவி வளா்ச்சிக்கு உதவாது. எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com