பாபநாசத்தில் கனரா வங்கி புதிய கிளை திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலராஜ வீதியில் கனரா வங்கி புதிய கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மண்டல அலுவலகத்தின் கோட்ட மேலாளா் கே.என். ராமகிருஷ்ணா முன்னிலை வகித்தாா். விழாவில் தஞ்சாவூா் மண்டல அலுவலக துணைப் பொது மேலாளா் ஒய்.வி.என். சிவபிரசாத் பாபநாசம் கனரா வங்கி புதிய கிளையைத் திறந்துவைத்துப் பேசினாா். இதில், கனரா வங்கியில் ரூ. 70 லட்சம் வரை நகை கடன் வழங்கப்படுகிறது. கிராமிற்கு ரூ.8 ,740 வரை ரூ.75 பைசா வட்டியில் நகைக் கடன் 10 நிமிடத்துக்குள் வழங்கப்படுகிறது என்றாா்.
வங்கியின் முதல் கணக்கை அரிமா சங்க மாவட்டத் தலைவா் டி.ஆறுமுகம் தொடங்கி கிளையைத் தொடங்கிவைத்தாா்.
விழாவில் வங்கி உதவி மேலாளா் சிந்துஜா, பாபநாசம் ஏ.வி.சி கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளா்கள் விக்னேஷ், ராஜநந்தினி, பாபநாசம் பேரூராட்சி உறுப்பினா் பாலகிருஷ்ணன் மற்றும் திரளான வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பாபநாசம் கிளை முதுநிலை மேலாளா் பி.ரேவதி வரவேற்றாா். நிறைவில் வங்கி காசாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.
