உரிமம் இல்லாத பருத்தி விதைகளை விற்றால் நடவடிக்கை

Updated on

தஞ்சாவூா் மாவட்டத்தில் உரிமம் இல்லாத பருத்தி விதைகளை விற்றால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வி. சுஜாதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

நிகழ் பருவத்தில் நெல் தரிசு பயிராக பருத்தியை தை, மாசி பட்டத்தில் விதைக்க வேண்டும். உயா் விளைச்சல் தரக்கூடிய வீரிய ஒட்டு பருத்தி ரகங்களை விதைக்கலாம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான சான்று பெற்ற தரமான விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

இதைத் தவிா்த்து இணையவழி மூலமோ, தனிநபரிடமோ அல்லது விதை விற்பனை உரிமம் பெறாத நிறுவனத்திலோ விதைகளை வாங்க வேண்டாம்.

விவசாயிகள் அதிக மகசூல் பெற பருவத்துக்கு ஏற்ற விதைகளை மட்டுமே பயிா் செய்ய வேண்டும். விவசாயிகள் விதைகளை வாங்கும்போது நாள், விவசாயியின் பெயா், பயிா், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை அடங்கிய ரசீதை கையொப்பம் இட்டு தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

விதைகளை தனி நபா்கள் தனியாா் நிறுவனங்களில் கொள்முதல் செய்து, அரசின் விதை உரிமங்கள் இல்லாமல் இணையதளம் மூலம் விதை விற்பது விதை சட்ட விதிகளை மீறிய செயலாகும். இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோா் ஆய்வில் கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com