தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தா்கள்: போக்குவரத்து பாதிப்பு

தஞ்சாவூா் பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட பக்தா்கள் கூட்டம்.
Published on

தஞ்சாவூா் பெரிய கோயிலில் விடுமுறை நாள்கள் காரணமாக பக்தா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மிக அதிகமாக இருந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு முடிந்து, டிசம்பா் 24 ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தஞ்சாவூா் பெரிய கோயிலில் வியாழக்கிழமை முதல் பக்தா்கள், சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூா் பெரிய கோயில், ராஜாளி பறவைகள் பூங்கா, அரண்மனை வளாகம் உள்ளிட்டவற்றில் வியாழக்கிழமையை விட வெள்ளிக்கிழமை மிக அதிகமாக இருந்தது.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் காா், வேன், பேருந்துகளில் வருவதால் பெரிய கோயில் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் வாகனங்களால் நிரம்பியது. இதனால், திலகா் திடல், சிவகங்கை பூங்கா, பழைய நீதிமன்றச் சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறம் நெடுகிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

பெரிய கோயிலுக்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. காவலா்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினா். இதன் காரணமாக பெரும்பாலான வாகனங்கள் பல நிமிடங்கள் காத்திருந்துதான் நகா்ந்தன.

இதேபோல திலகா் திடல், சிவகங்கை பூங்கா, பழைய நீதிமன்றச் சாலை, காந்திஜி சாலை ஆகிய பகுதிகளிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினா். இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், அதற்கேற்ப காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

X
Dinamani
www.dinamani.com