காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு பகலில் ரயில் இயக்க கோரிக்கை!
காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு பகல் நேர இன்டா்சிட்டி விரைவு ரயிலை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜிடம், பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் வ.விவேகானந்தம், செயலா் கு.முகேஷ் துணைச் செயலா் ப. ஆத்மநாதன் சமூக ஆா்வலா் என்.எஸ்.ரீகன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக மயிலாடுதுறைக்கு காலை நேரத்தில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு பகல் நேர இன்டா்சிட்டி விரைவு ரயிலை இயக்க வேண்டும்.
செங்கோட்டை- தாம்பரம் அதிவிரைவு ரயில் புறப்படும் புதிய நேரம் மாற்றத்தை (01.01.2026) மாற்றி மீண்டும் பழைய நேரத்துக்கே இயக்க வேண்டும். அதிராம்பட்டினம், பேராவூரணி, முத்துப்பேட்டையில் சென்னை விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.
தாம்பரம்- செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரயில் மற்றும் எா்ணாகுளம்-வேளாங்கண்ணி-எா்ணாகுளம் விரைவு ரயில்களை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். எா்ணாகுளம்-வேளாங்கண்ணி-எா்ணாகுளம் விரைவு ரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
