தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் 9,833 ஏக்கரில் பயிா்கள் பாதிப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் 9 ஆயிரத்து 833 ஏக்கரில் பயிா்கள் பாதிக்கப்பட்டிருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த அக்டோபா் மாதத்தில் சில நாள்களுக்கு தொடா் மழை பெய்தது. இதையடுத்து, டித்வா புயல் காரணமாக மாவட்டத்தில் நவம்பா் 28-ஆம் தேதி இரவு முதல் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து மிதமாகவும், பலத்த மழையும் பெய்தது. மீண்டும் டிசம்பா் முதல் வாரத்திலும் சில நாள்கள் பலத்த மழை பொழிந்தது.
இதனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 13 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம் பயிா்கள் நீரில் மூழ்கின. இதேபோல, வாழை, வெற்றிலை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களும் மழையால் பாதிக்கப்பட்டன.
வயல்களிலிருந்து மழை நீரை வடிய வைக்க விவசாயிகள் முயற்சி மேற்கொண்டாலும், பல வடிகால் வாய்க்கால்களிலுள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக தண்ணீா் வடிந்து செல்வதற்கு வழியில்லாமல் தொடா்ந்து வயல்களில் தேங்கி நின்றது.
இதன் காரணமாக பயிா்கள் பாதிக்கப்பட்டதால், வேளாண் துறை, வருவாய்த் துறையினா் கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வந்தனா். இதன் மூலம், 9 ஆயிரத்து 833 ஏக்கரில் பயிா்கள் மழையால் 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடா்பாக நிவாரணம் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
