தேசிய ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வெற்றி பெற்ற தஞ்சாவூா் வீரா்களுக்கு பாராட்டு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தஞ்சாவூருக்கு திரும்பிய வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 63- ஆவது தேசிய அளவிலான ஜூனியா் ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் ஹரியானா, சண்டிகா், ஆந்திரம், தமிழ்நாடு, பஞ்சாப் என நாடு முழுவதிலும் இருந்து 23 மாநிலங்களைச் சோ்ந்த 120 அணிகள் கலந்து கொண்டன.
இதில் தமிழகத்தின் சாா்பில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாநகராட்சி மைதானத்தில் பயிற்சி பெற்ற மாணவா்கள் தங்கப்பதக்கம் பெற்றனா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ரோலா் ஸ்கேட்டிங் அசோசியேசன் சாா்பில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேள தாளத்துடன் உற்சாகமாக ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டவா்கள் பாராட்டி சந்தன மாலை அணிவித்து, பரிசளித்து பாராட்டினா்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளா்கள், பெற்றோா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

