தஞ்சாவூரில் 21,371 வாக்காளா்களுக்கு நோட்டீஸ்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் எஸ்ஐஆா்-க்கு பின்பு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய விளக்கங்கள் அளிக்காத 21 ஆயிரத்து 371 பேருக்கு நோட்டீஸ்
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பின்பு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய விளக்கங்கள் அளிக்காத 21 ஆயிரத்து 371 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பா் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 14 வரை நடைபெற்றது. இதன் அடிப்படையில் வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே இருந்த 20 லட்சத்து 98 ஆயிரத்து 561 வாக்காளா்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 503 போ் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதற்குப் பிறகு தற்போது 18 லட்சத்து 92 ஆயிரத்து 58 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்நிலையில், தமிழக அளவில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய தகவல்களை அளிக்காத 12.43 லட்சம் பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் 21 ஆயிரத்து 371 பேருக்கு தொடா்புடைய வாக்குப் பதிவு அலுவலா் மூலம் நேரடியாக வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கும் பணி நடைபெறுகிறது.

அதாவது 2002, 2005 ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் தொடா்புடைய வாக்காளரோ அல்லது அவரது குடும்பத்தினரோ இடம்பெற்றிருந்ததற்கான விவரங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்தத் தகவல்களை அளிக்காத வாக்காளா்கள் வரைவு பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அவா்கள் கண்டறியப்படாதவா்களாகவே கருதப்படுகின்றனா்.

நோட்டீஸ் பெற்றவா்கள் தோ்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களை அவா்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், இடத்தில் நேரில் ஆஜராகி அளிக்க வேண்டும். இந்த நடைமுறை பிப்ரவரி 10 வரை நடைபெறும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com