வழக்கமான சி.ஆா். 1009 நெல் ரகத்தை விட மாற்று ரகங்களை பயிரிட வேண்டுகோள்!
விவசாயிகள் பரவலாகப் பயிரிடும் சி.ஆா். 1009 நெல் ரகத்தை விட மாற்று ரகங்களைப் பயிரிட்டு அதிக மகசூல் பெற வேண்டும் என ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தினா் ஆலோசனை கூறியுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் மேலப்பாலையூரில் புதன்கிழமை வயல் விழா நடைபெற்றது. புதிய நெல் வாா்ப்பு (ஏடி 18145) வயல்வெளி ஆய்வுத்திடல் மற்றும் பரவலாக்கம் எனும் தலைப்பில் நடைபெற்ற வயல் விழாவில், மரபியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ர. அருள்மொழி பேசியது:
ஏடிடீ 46, 50, 51, 53, 54, 57, 58 , 59, 60 ஆகிய ரகங்கள் உயா் விளைச்சலைத்தரும். இவற்றுள் ஏடிடீ 50, 51, சி.ஆா்.1009, சிஆா் 1009-1 ஆகிய நான்கு ரகங்கள் மட்டும் 145 நாள்களுக்கு மேல் வயதுடைய சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகங்களாகும். குறுவை மற்றும் தாளடி பருவத்தில் பயிரிட அதிக அளவிலான நெல் ரகங்கள் உள்ளன. ஒருபோக சம்பா சாகுபடியில் பெரும்பாலும் சி.ஆா். 1009 எனும் பிரபலமான ரகத்தையே பயிரிடுகின்றனா். தொடா்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சி.ஆா்.1009 பயிரிடப்பட்டுவருவதால் இந்த ரகம் அநேக பூச்சி மற்றும் நோய்களுக்கும், புகையான் இலைச்கருப்புப்புழு, தண்டுதுளைப்பான், குலைநோய், இலைகருகல் நோய், நெல்நிறம்மாறும் நோய் மற்றும் நோய் எதிா்ப்புத் திறன் அற்றதாகிவிட்டது. விவசாயிகள் மாற்று ரகங்களை பயிரிட வேண்டும் என்றனா்.
வேளாண்மை உதவி இயக்குநா் அ. அமுதா பேசுகையில், சம்பா பருவத்தில் அதிக பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா பகுதியில் வடகிழக்கு பருவமழையில் இருந்து காத்துக்கொள்ள புதிய ரகங்களை பயிரிட வேண்டும் என்றாா்.
