கல்லூரிக் கழிப்பறையில் குழந்தை பெற்றுக் குப்பையில் வீசிய மாணவி!

கல்லூரி மாணவி கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பற்றி..
மாணவிக்கு பிறந்த குழந்தை
மாணவிக்கு பிறந்த குழந்தை
Published on
Updated on
1 min read

அரசு மகளிர் கல்லூரி மாணவி கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்து, குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், ஜெயங்கொண்டம், அரியலூர், டி பழூர், அணைக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், மகளிர் கல்லூரியில் பயிலும் 20 வயது மாணவி ஒருவர் திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பம் அடைந்துள்ளார். தான் கர்ப்பம் அடைந்ததை வீட்டிற்கும் மற்றும் கல்லூரிக்கும் தெரியாமல் வேறு வேறு காரணங்களைச் சொல்லி மூடி மறைத்துள்ளார். இந்நிலையில் நேற்று வகுப்பறையில் அமர்ந்து பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்த மாணவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக வயிறு வலிப்பதாகவும் கூறி கழிப்பறைக்குச் சென்ற மாணவி, பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தொடர்ந்து யூடிப் மூலம் தொப்புள் கொடி அறுத்து அந்தக் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கல்லூரியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டு மேல குப்பைகளை அள்ளி மூடி மறைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வகுப்பறையில் வந்து அமர்ந்துள்ளார். அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதைப் பார்த்த அருகிலிருந்த மாணவிகள் அவரிடம் கேட்டபோது மாதவிடாய் காரணமாக ரத்தப்போக்கு ஏற்படுவதாகக் கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாக வெளியேறுவதைப் பேராசிரியர்களிடம் சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து வந்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவிக்கு தற்போது தான் குழந்தைப் பிறந்துள்ளதாகவும், அதன் காரணமாக இந்த ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததைக் கேட்டு பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு பெண் குழந்தை பிறந்ததையும் அதனை குப்பைத் தொட்டியில் போட்டு மூடி வைத்துள்ளதையும் கூறியதைக் கேட்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கல்லூரிக்குச் சென்று குப்பைத் தொட்டியிலிருந்த உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் உடனடியாக குழந்தைக்குச் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர். தற்போது அந்த மாணவி அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாச்சியார் கோயில் மற்றும் ஆடுதுறை மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.