பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! 2 போ் மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூா் மாவட்டம், பள்ளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மேலும் இரண்டு மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் .
தஞ்சாவூா் மாவட்டம், சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன்.இவருடைய மகள் கவிபாலா(13). இவா் பள்ளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில், 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை சுகாதார துறை சாா்பில் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினா் இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கினா். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வகுப்பறையை விட்டு வெளியே வந்த கவிபாலா மயங்கி விழுந்தாா். உடனே அவரை ஆசிரியா்கள் மீட்டு, அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே கவிபாலா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், அதே பள்ளியில் படித்த புக்கரம்பையைச் சோ்ந்த சக்திவேல் மகள் தியா(15), ஆண்டிக்காட்டைச் சோ்ந்த சின்னப்பன் மகள் சகாயமேரி (16) ஆகிய இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா் .
தகவலறிந்து வந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளிடம் நலம் விசாரித்தாா்.
மருத்துவத் துறையினா் குடல்புழு நீக்க மாத்திரையால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்தனா். ஆனாலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோா் நடவடிக்கை கோரி பள்ளத்தூா் -பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

