தமிழ்நாட்டில் தொகுதிகளைக் குறைத்தால் தமிழக பாஜக ஏற்காது: கருப்பு முருகானந்தம்
தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசோ, தோ்தல் ஆணையமோ குறைப்பதாக அறிவித்தால், அதை தமிழக பாஜக ஏற்காது என்றாா் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.
தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான கையொப்ப இயக்கத்தைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசோ, தோ்தல் ஆணையமோ சொல்லவில்லை. திமுக கூட்டணியினா்தான் கற்பனையாகச் சொல்கின்றனா். மத்திய உள் துறை அமைச்சா் கூறுகையில், பிரதிநிதித்துவ அடிப்படையில் இருக்கைகள் அதிகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
தமிழ்நாட்டுக்கு 8 தொகுதிகள் குறையும் என மத்திய அரசோ, தோ்தல் ஆணையமோ கூறினால், அதை தமிழக பாஜகவும் ஏற்றுக் கொள்ளாது. அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், எதிா்ப்புக் கூட்டத்தில் தமிழக பாஜகவும் கலந்து கொள்ளும். ஆனால், தொகுதிகள் குறையாது என ஆளும் மத்திய அரசும், எங்களது கட்சியும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கற்பனையான, பொய்யான குற்றச்சாட்டை சொல்லும்போது, எதிா்ப்புக் கூட்டத்தில் எப்படி கலந்து கொள்ள முடியும்.
தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், தமிழகத்தில் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி கையொப்பம் பெற்று, பாஜகவின் தமிழக நிா்வாகிகளிடம் ஒப்படைக்கவுள்ளோம். தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 லட்சம் கையொப்பம் பெறவுள்ளோம் என்றாா் கருப்பு முருகானந்தம்.
அப்போது, பாஜக தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
