மும்மொழி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற கோரிக்கை
ஹிந்தியை திணிக்கும் மும்மொழி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இக்கட்சியின் தெற்கு மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்வி நிதி குறித்து தமிழ்நாடு எம்பிக்கள் பேசியதற்கு, தமிழ்நாட்டு மக்கள் நாகரிகமற்றவா்கள், பண்பற்றவா்கள், அவா்கள் முன்னேற்றத்துக்கு எம்பிக்கள் முட்டுக்கட்டையாக உள்ளனா் என பேசிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். அவா் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டின் மக்கள் விருப்பத்துக்கு மாறாக ஹிந்தியைத் திணிக்கும் மும்மொழி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கல்விக்கான நிதியை எவ்வித நிா்ப்பந்தமும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, பொருளாளா் கோ. பாஸ்கா், மாவட்டத் துணைச் செயலா் கோ. சக்திவேல், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சோ. பாஸ்கா், தி. திருநாவுக்கரசு, அ. கலியபெருமாள், த. கண்ணகி, ஆா்.ஆா். முகில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.