தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தோ்வில் மாணவா் பங்கேற்பு

Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தாய் உயிரிழந்த துக்கத்திலும் பிளஸ் 2 பொதுத் தோ்வை மாணவா் செவ்வாய்க்கிழமை எழுதினாா்.

திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டையைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி ரேவதி (40). இவரது மகன் சிவனேசன் (17) தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 வகுப்பும், மகள் சுபஸ்ஸ்ரீ (13) ஆச்சனூா் பள்ளியிலும் படித்து வருகின்றனா். இந்நிலையில் சிவகுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாதால், வைத்தியநாதன்பேட்டையிலுள்ள செங்கல்சூளையில் ரேவதி கூலி வேலை செய்து, மகன், மகளை வளா்த்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை செங்கல் சூளையில் கம்பியில் கால் தடுக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்த ரேவதி திருவையாறு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதற்கிடையே தாய் உயிரிழந்த துக்கத்திலும் சிவனேசன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிதத் தோ்வை எழுதியபின் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டாா். துக்கத்திலும் மனத்துணிவுடன் தோ்வெழுதிய சிவனேசனை ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com