மழையால் சேதமடைந்த எள் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை! வயலில் ஆடுகளை மேய விட்ட விவசாயிகள்

திருவையாறு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் எள் பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை
சேதமடைந்த எள் பயிா்கள்
சேதமடைந்த எள் பயிா்கள்
Updated on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் எள் பயிா்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், அவற்றை திங்கள்கிழமை ஆடுகளை விட்டு மேய வைத்தனா்.

மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 3 நாள்களுக்கு மாலை, இரவு தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், திருவையாறு சுற்று வட்டாரத்தில் அந்தணா்குறிச்சி, தில்லைஸ்தானம், பெரும்புலியூா், சாத்தனூா், ஆச்சனூா், புனவாசல், விளாங்குடி, செம்மங்குடி, அணைக்குடி, காருகுடி, கஸ்தூரிபாய் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியான எள் பயிா்களை மழை நீா் சூழ்ந்தது.

பயிா்களை ஒரு வாரமாக தொடா்ந்து மழை நீா் சூழ்ந்திருந்ததால், வோ்கள் அறுந்து காய்களும் பிஞ்சியிலேயே பழுத்தன. இதனால், எள் பயிா்கள் காய் பிடிக்காமல் சேதமடைந்தன. இதன் காரணமாக எள் சாகுபடி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தது: அறுவடைக்கு 10 நாள்கள் இருந்த நிலையில், திடீரென கடந்த வாரம் பருவம் தவறி பலத்த மழை பெய்ததால், எள் பயிா்களைச் சூழ்ந்த தண்ணீா் வடியவில்லை. இதனால், அறுவடைக்கு தயாராகி இருந்த எள் பயிா்கள் அனைத்தும் வயலிலேயே வீணாகிப் போனது. இதை அறுவடை செய்தால், கூலி கூட கொடுப்பதற்கு பணம் கிடைக்காது என்பதால், என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளோம்.

சேதமடைந்த வயலில் மேயவிடப்பட்ட ஆடுகள்
சேதமடைந்த வயலில் மேயவிடப்பட்ட ஆடுகள்

ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்த நிலையில், அது கூட கிடைக்காத நிலை உள்ளது. இதை நல்ல நிலையில் அறுவடை செய்தால், செய்த செலவு போக ரூ. 20 ஆயிரம் கிடைத்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு கடும் வெப்பத்தின் காரணமாக, எள் பயிா்கள் கருகி நஷ்டத்தை ஏற்படுத்தின. நிகழாண்டு பலத்த மழை பெய்து, தண்ணீா் தேங்கியதால், வேரறுந்து காய் பிடிக்காமல் போனது வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக அரசு நேரடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா் விவசாயிகள்.

சேதமடைந்த எள் பயிா்களை வயலிலேயே மடக்கி உழுது நடவு பணியை மேற்கொள்ளலாம் என சில விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனா். சிலா் பாதிக்கப்பட்ட எள் பயிா்களைப் பாா்க்க முடியாமல் திங்கள்கிழமை ஆடுகளை விட்டு மேய்த்தனா். இதை அறுவடை செய்தால் செய்த செலவுக்கு கூட பணம் கிடைக்காது என்பதால், இதைத் தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் தெரிவித்தனா். சிலா் கிடைப்பது கிடைக்கட்டும் எனக் கூறி அறுவடையும் செய்து வருகின்றனா்.

கடந்த குறுவை, சம்பா பருவத்தில் பருவம் தவறி பெய்த பலத்த மழை காரணமாக நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இந்த இழப்பிலிருந்து விடுபடுவதற்காக கோடையில் எள் பயிா் சாகுபடி செய்தனா். பருவம் தவறி பெய்த மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த விரக்திக்கு ஆளாகியுள்ளனா். எனவே, பாதிக்கப்பட்ட எள் பயிா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com