மின்னல் தாக்கி இறந்த விவசாயிக்கு நிவாரண தொகை தாமதமின்றி வழங்கக் கோரிக்கை
விவசாய பணியின் போது மின்னல் தாக்கி இறந்த விவசாய தொழிலாளா்களுக்கு நிவாரண தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் சு.விமல்நாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
கடந்த அக்.16-இல் கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கழுதாவூா் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண் விவசாய தொழிலாளா்கள் அரியநாச்சி, சின்னப்பொண்ணு, கனிதா, பாரிஜாதம், காட்டுமன்னாா்குடி வட்டம் ராஜசூடாமணி கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோா் வயல்களில் வேலை பாா்க்கும் போது மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.
ஆனால் இதுவரை உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்கியது தமிழக அரசு.
கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சமும் மத்திய அரசு தலா ரூ.2 லட்சமும் வழங்கியது. நாட்டுக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் இயற்கை மின்னல் தாக்கி இறந்ததற்கு தமிழக முதல்வா் ரூ.5 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளாா். பிரதமா் நிவாரண தொகை அறிவிக்கவில்லை. இது இந்திய நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2024-2025 சம்பா பருவத்தில் கடந்த மாா்ச் மாதம் முடிந்தும் பிரதமரின் பயிா் காப்பீட்டு தொகை 7 மாதங்களை கடந்தும் வழங்கவில்லை.
வேளாண் பணிகளின் போது இயற்கையான இடி மின்னல், நஞ்சு உயிரினங்கள், வனவிலங்குகளின் தாக்குதல், அறுவடை பணியின் போது இயந்திரங்களில் சிக்கி உயிரிழப்பு, விவசாய பணியின் போது உயிரிழப்பு, ஊனமடைதல் போன்றவைகள் ஏற்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள் உழவா் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.
