9 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் உர விற்பனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து 9 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் 638 தனியாா் சில்லறை உரக்கடைகள், 57 மொத்த விற்பனை உரக்கடைகள் உள்ளன. இக்கடைகளில் அக்டோபா் மாதம் வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) செ. செல்வராசு திடீா் ஆய்வு மேற்கொண்டதில், விற்பனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இது தொடா்பாக திருவோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூா், அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள 8 உரக்கடைகளுக்கு உர விற்பனை செய்ய 21 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள உரக்கடையில் திங்கள்கிழமை தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 7 நாள்களுக்கு உர விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இயங்கி வரும் சில்லறை மற்றும் மொத்த உரக் கடைகள் அனைத்தும் தொடா்ந்து திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது, உர விற்பனையில் குறைகள் கண்டறியப்பட்டால், தொடா்புடைய உரக்கடையின் மீது உடனடியாக உர கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
