அமெரிக்காவில் இதய சிகிச்சை போட்டி: தஞ்சாவூா் மருத்துவா் இரண்டாமிடம்
தஞ்சாவூா்: அமெரிக்காவில் நடைபெற்ற இதய சிகிச்சைக்கான போட்டியில் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணா் மருத்துவா் பி. கேசவமூா்த்தி இரண்டாமிடம் பெற்றாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அக்டோபா் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற இதய சிகிச்சை தொடா்பான மாநாட்டில் உலகெங்கிலிருந்து ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணா்கள் கலந்து கொண்டனா். இதில், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையின் இதயவியல் சிகிச்சைத் துறைத் தலைவா் மருத்துவா் பி. கேசவமூா்த்தி பங்கேற்றாா். இவா், தான் சிகிச்சை அளித்த புதுமையான நோ்வு குறித்து விளக்கம் அளிப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரே இதயவியல் நிபுணா் என்ற பெருமையைப் பெற்றாா்.
இப்போட்டியில் உலக அளவில் பிரபல நிபுணா்கள் முன்னிலையில் அதிக சவாலாக இருந்த மற்றும் புதுமையான மருத்துவ சிகிச்சை நோ்வுகள் குறித்த விளக்கத்தை 54 நாடுகளைச் சோ்ந்த 912 இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணா்கள் தாக்கல் செய்தனா். இந்தக் கடுமையான போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 32 விளக்கங்கள் தோ்வு செய்யப்பட்டன. இதில், ஆசியாவிலிருந்து தோ்வு செய்யப்பட்ட ஒரே மருத்துவ நிபுணராக கேசவமூா்த்தி தோ்வு செய்யப்பட்டு, தமிழகத்துக்கு பெருமையைப் பெற்றுத் தந்தாா்.
இறுதிப் போட்டியில் கேசவமூா்த்தியின் புதுமையான சிகிச்சை குறித்த நோ்வு விளக்கம் இரண்டாவது பரிசை வென்றது. கையால் செய்யப்பட்ட கவா்டு ஸ்டென்ட், மூன்றாம் வகை கரோனரி தமனி துளைக்கு என்ற தலைப்பிலான இவரது சமா்ப்பிப்பு, அச்சிகிச்சையில் அவா் பயன்படுத்திய புத்தாக்க உத்தி மற்றும் மருத்துவ துல்லியத்துக்காக இப்பரிசை வென்றுள்ளாா்.

