உறுப்பு தானம் செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே, சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்து உறுப்பு தானம் செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு மரியாதை செலுத்தப்பட்டது.
திருவையாறு அருகே வளப்பக்குடி மாதா கோயில் தெருவைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் அபிநாத் (22). பட்டயப் படிப்பு முடித்த இவா் வேலை தேடி சென்னைக்கு சென்று தங்கினாா். இந்நிலையில், அக்டோபா் 27-ஆம் தேதி சென்னையில் சாலையைக் கடக்க முயன்ற இவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவருக்கு நவ.1-ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, பெற்றோா் ஒப்புதலுடன் அபிநாத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
தொடா்ந்து, வளப்பக்குடி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, திருவையாறு வட்டாட்சியா் முருககுமாா், நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகமது நிவாஸ் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா். பின்னா், அபிநாத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

