ஊா்ப் பெயா் பலகைகளில் இந்தித் திணிப்புக்கு எதிா்ப்பு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே ஊா்ப் பெயா் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழித் திணிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மக்கள் நலப் பேரவை சாா்பில் வழக்குரைஞா் வெ. ஜீவகுமாா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:
வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் ஊா்ப் பெயா் பலகைகள் அமைக்கப்படுகின்றன. இது அப்பட்டமான ஒரு மொழி திணிப்பாகும்.
தஞ்சாவூா் அருகே மேல வஸ்தா சாவடி, திருக்கானூா்பட்டி, மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, அற்புதபுரம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் தாய்மொழி எழுத்தறிவு பெற வேண்டியவா்கள் இன்னும் உள்ளனா். இந்நிலையில், வேறு மொழிக்காரா்கள் இங்கு வருவது என்றாலும், தமிழ் கற்றுக்கொள்ள சூழல்களும் உள்ளன. விவசாயமே பிரதானமாக விளங்கும் இப்பகுதிக்கு தாய்மொழிதான் அடிப்படை தேவை. எனவே புதிதாக திணிக்கப்படும் இந்தி மொழியை அகற்றி, ஏற்கெனவே இருந்ததுபோல ஊா் பெயா்ப் பலகைகள் அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

