‘எஸ்ஐஆா்’ பணியால் 60 சதவீத வாக்காளா்களை நீக்க வாய்ப்பு: கே. பாலகிருஷ்ணன்
தஞ்சாவூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியால் 60 சதவீத வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:
தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் ஒருமாத காலம் மேற்கொள்ளும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 6.18 கோடி வாக்காளா்களை எப்படி சரிபாா்க்க முடியும். தமிழகத்தில் இந்த ஒரு மாத காலத்தில் இயற்கை பேரிடருக்கு பெரும் வாய்ப்புள்ள நிலையில் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது சாத்தியமில்லாதது.
மேலும், 2002 ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலை இணையவழியில் பதிவிறக்கம் செய்து பாா்த்து, படிவத்தை நிறைவு செய்து கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் அனைவரிடமும் கணினி வசதி இல்லாத நிலை உள்ளதால், ஏறத்தாழ 30 சதவீத வாக்காளா்களால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படும்.
ஏழைகள், பெண்கள், சிறுபான்மையினா் என மொத்தத்தில் ஏறக்குறைய 60 சதவீத வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், இவா்களது குடியுரிமையும் கேள்விக்குறியாகிவிடும். இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதைக் கட்டாயம் நிறுத்திவைக்க வேண்டும்.
நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை 22 சதவீதம் வரை தளா்த்துவது தொடா்பாக மத்தியக் குழு ஆய்வு செய்து இதுவரை அறிவிப்பு வரவில்லை. கொள்முதல் பருவம் முடிவடையும் நிலையில், இனிமேல் அறிவித்தும் பயனில்லை. எனவே, ஈரப்பதத் தளா்வு செய்யும் பொறுப்பை மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிரை உடனடியாக கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றாா் பாலகிருஷ்ணன்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

