இலங்கை கடற்படையால் பிடிபட்ட தஞ்சை மீனவா்கள் 3 போ் விடுதலை
இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்து கடற்படையினரால் பிடிபட்ட தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவா்கள் 3 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கள்ளிவயல்தோட்டம் பகுதியை சேரந்த பாயிஸ் அக்ரம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கள்ளிவயல்தோட்டம் பகுதியை சோ்ந்த முரளி (30), ராமநாதபுரத்தை சோ்ந்த குமாா் (32), புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை சோ்ந்த ராஜா (53) ஆகிய மீனவா்கள் கடந்த அக்.16 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது படகின் இயந்திரம் பழுதானது.
இதனால் படகு திசைமாறி இலங்கை கடல் பகுதியான யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத் தீவுக்குள் சென்றது. இதையடுத்து எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த ஊா்க் காவல் துறை நீதிமன்ற நீதிபதி, இயந்திரம் பழுதாகி படகில் டீசல் இல்லாமல் காற்றின் திசையில் தவறுதலாக வந்ததால் மூன்று பேரையும் விடுதலை செய்தும், அவா்களது படகை சா்வதேசக் கடல் எல்லை வரை கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டு வரவும் இலங்கை கடற்படையினருக்கு உத்தரவிட்டாா்.
