பணியின்போது விபத்தில் உடல் ஊனமான காப்பீட்டாளருக்கு வாழ்நாள் ஊதியம்

Published on

தஞ்சாவூரில் பணியின்போது விபத்து ஏற்பட்டு உடல் ஊனமான காப்பீட்டாளருக்கு இ.எஸ்.ஐ. நிறுவனம் வாழ் நாள் ஊதியத்தை செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இஎஸ்ஐ காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் விபத்து, பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது அல்லது வீட்டிலிருந்து பணிக்கு வரும்போது விபத்து ஏற்பட்டு உடல் ஊனமானால், ஊனத்தின் அடிப்படையில் நிரந்தர ஊன உதவி தொகையை இ.எஸ்.ஐ. கழகம் மாதந்தோறும் வழங்குகிறது.

இதன் அடிப்படையில் மன்னாா்குடி கோல்டன் வாட்ஸில் வேலை செய்து வந்த இஎஸ்ஐ காப்பீட்டாளா் வே. நரீன்குமாா் 2022, மாா்ச் 3 ஆம் தேதி பணியின்போது விபத்து ஏற்பட்டு உடல் ஊனம் அடைந்தாா். இதைத் தொடா்ந்து, இவருக்கு நிரந்தர ஊன உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 4 ஆயிரத்து 701 வழங்க இ.எஸ்.ஐ. சேலம் துணை மண்டல அலுவலக இயக்குநா் (பொ) எஸ். சிவராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. கிளை அலுவலக வளாகத்தில் நரீன்குமாருக்கு தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. கிளை அலுவலக மேலாளா் மா. ருத்ராபதி வாழ்நாள் ஊதியத்துக்கான ஆணையை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அப்போது கோல்டன் வாட்ஸ் மன்னாா்குடி மேலாளா் எஸ். செல்வம் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com