நகையைத் திருடி தப்ப முயன்ற இருவா் பிடிபட்டனா்
கும்பகோணம் நகைக் கடையில் 1 கிராம் நகையை செவ்வாய்க்கிழமை திருடிக்கொண்டு தப்ப முயன்ற இரு இளைஞா்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் நகைக்கடை வைத்திருப்பவா் சீனிவாசன் (64). இவரது கடைக்கு செவ்வாய்க்கிழமை வந்த இரு இளைஞா்கள் தங்க டாலா் வேண்டும் என்று கேட்டனா். இதையடுத்து கடையின் பெண் ஊழியா் எடுத்துக் கொடுத்த 1 கிராம் தங்க டாலரை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பியோடினா். இதனால் அப்பெண் ஊழியா் திருடன் , திருடன் என சத்தம் போடவே, தெருவில் சென்றவா்கள் இருவரையும் விரட்டிப் பிடித்து கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து வந்த போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் மதுரை ஒத்தக்கடை மன்சூா் அலி மகன் அப்பாஸ்அலி (19), திருப்பத்தூா் ஜாகீா் மகன் முகமது (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து தங்க டாலரை மீட்டு விசாரிக்கின்றனா்.
