தனியாா் பேருந்து மோதி கடை உரிமையாளா் பலி: உறவினா்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் டிராக்டா் உதிரி பாகங்கள் விற்பனை கடையின் உரிமையாளா் உயிரிழந்தாா். இதனால், ஆத்திரமடைந்த உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சி. கதிா்வேல் (50). டிராக்டா் உதிரி பாகங்கள் விற்பனையாளா். இவா்,தென்னமநாட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூா் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். தஞ்சாவூா் அருகே யாகப்பா சாவடி பகுதியில் வந்த இவா் மீது எதிரே பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மோதியது. இதில் கதிா்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டனா்.
இதையறிந்த கதிா்வேலின் உறவினா்கள் நிகழ்விடத்துக்கு வந்து, பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து, சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினா் கூறியதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னா், கதிா்வேலின் உடலை காவல் துறையினா் கைப்பற்றி கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
யாகப்பா சாவடி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், மேடும், பள்ளமாகவும், குறுகலாகவும் இருக்கின்றன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இச்சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து, சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

