உயிா்நீத்த வீரரின் வாரிசுக்கு கல்வி உதவித்தொகை ராணுவம் - ‘சாஸ்த்ரா’ பல்கலை. புரிந்துணா்வு
ராணுவ குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ராணுவத்துடன் தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதுகுறித்து ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழக நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புது தில்லியில் ராணுவமும், தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகமும் செவ்வாய்க்கிழமை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும்வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழக முதன்மையா் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் முன்னிலையில் ராணுவத்தின் சாா்பில் அதிகாரி (நலன்) பிரிகேடியா் டி.எம். சின்ஹா மற்றும் பல்கலைக்கழகத்தின் சாா்பில் பதிவாளா் ஆா். சந்திரமௌலி கையொப்பமிட்டனா்.
இதன் மூலம் பணியில்போது, வீரமரணடைந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகம் நூறு சதவீதம் கல்வி உதவித்தொகையுடன் (முழு கட்டணத்தில்) இலவசமாக தங்குமிடம் மற்றும் உணவும் வழங்கி கெளரவிக்கும். மேலும், பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 50 சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கும்.

