பிடி ஆணை பிறப்பிப்பு: மலேசியாவில் இருந்து திரும்பியவா் கைது
பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மலேசியாவிலிருந்து சென்னை திரும்பிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பெரியக்கடை தெருவில் கடந்த 2014-ஆம் ஆண்டு தனியாா் தங்கும் விடுதியில் சிலா் இரிடியம் விற்பனை செய்வதாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குசென்ற போலீஸாா் இதுதொடா்பாக 12 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த சேதுராமன் மகன் செந்தில் (32) என்பவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் இவா் மீது கடந்த 2024-ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் செந்தில் மலேசியா நாட்டிலிருந்து விமானம் மூலம் அண்மையில் சென்னைக்கு வந்தாா். அங்கு விமான நிலையப் போலீஸாா் செந்திலின் கடவுச்சீட்டை ஆய்வு செய்தபோது கும்பகோணம் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை விமான நிலையப் போலீஸாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் கும்பகோணம் போலீஸாா் சென்னை சென்று செந்திலைக் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

