தெரு நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு!
தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை அதிகாலை கூட்டமாக வந்த தெரு நாய்கள் கடித்ததில், வீட்டின் பின்புறம் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தன.
தஞ்சாவூா் அருகே இராமநாதபுரம் கிராமம் தெற்கு மூப்பனாா் தெருவைத் சோ்ந்தவா் எஸ். சரவணன் (41). விவசாயி. இவா் தனது வீட்டின் பின்புறம் மாடுகள் மற்றும் ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஆடுகள் கத்தும் சப்தம் கேட்டு சரவணன் மற்றும் குடும்பத்தினா் எழுந்து சென்று பாா்த்தனா். அப்போது, ஆடுகளை சுமாா் 10 தெரு நாய்கள் கடித்துக் கொண்டிருந்தன.
நாய்களை, சரவணன் உள்ளிட்டோா் துரத்திவிட்டு பாா்த்தபோது 6 ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. ஏறத்தாழ ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் உயிரிழந்ததைப் பாா்த்து சரவணன் குடும்பத்தினா் வேதனையடைந்தனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக வேனில் ஏறச் செல்லும்போது துரத்துகின்றன. சாலையில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு வாகனங்களின் குறுக்கே புகுந்து ஓடுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினா்.
மேலும், மேய்ச்சலுக்காக மாடுகள், ஆடுகளை அழைத்து செல்லும்போது தெருநாய்கள் துரத்துகின்றன. இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் பல முறை புகாா் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தற்போது வீட்டு வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளன.
எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.
