மழையால் பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களில் மகசூல் இழப்பு: ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடியில் அபரிமிதமான விளைச்சல் கிடைத்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களால் விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்தித்துள்ளனா்.
தஞ்சாவூா் அருகே மேல உளூா் பகுதியில் மழையால் சாய்ந்த குறுவை பருவ நெற் பயிா்கள்.
தஞ்சாவூா் அருகே மேல உளூா் பகுதியில் மழையால் சாய்ந்த குறுவை பருவ நெற் பயிா்கள்.
Updated on

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடியில் அபரிமிதமான விளைச்சல் கிடைத்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களால் விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்தித்துள்ளனா்.

நிகழாண்டு மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதால், மாவட்டத்தில் குறுவைச் சாகுபடியில் இலக்கை விஞ்சி 1.99 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, இதுவரை ஏறத்தாழ 1.97 லட்சம் ஏக்கரில் அறுவடைப் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள ஏறக்குறைய 2 ஆயிரம் ஏக்கரில் அறுவடைப் பணி ஒரு வாரத்தில் முடிந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அமோக விளைச்சல்: இதில் முன்பட்டத்தில் சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு இயல்பான அளவைவிட ஒன்றரை மடங்கு முதல் 2 மடங்கு கூடுதலாக மகசூல் கிடைத்தது. ஏக்கருக்கு இயல்பாக 30 முதல் 35 மூட்டைகள் கிடைத்த நிலையில், நிகழாண்டு சராசரியாக 45 - 50 மூட்டைகள் மகசூல் கிடைத்தது. ஏராளமான விவசாயிகள் ஏக்கருக்கு 60 முதல் 75 மூட்டைகள்கூட விளைச்சலைப் பெற்றுள்ளனா்.

அதாவது ஏக்கருக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 400 கிலோ மகசூல் கிடைக்கும் நிலையில், நிகழாண்டு சராசரியாக 2 ஆயிரத்து 800 முதல் 3 ஆயிரம் கிலோ கிடைத்தது என்கின்றனா் வேளாண் துறையினா்.

குறிப்பாக, டி.பி.எஸ். 5, ஏஎஸ்டி 16 ரகங்களை விதைத்த பெரும்பாலான விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் கிடைத்தது. நிகழாண்டு சன்ன ரகமான டி.பி.எஸ். 5 ரகம் மட்டும் 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் விதைக்கப்பட்டது. இதன் மூலம் முன் பட்டத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைத்தது.

ஆனால், குறுவை சாகுபடிப் பணியைத் தாமதமாகத் தொடங்கிய விவசாயிகளின் நெற் பயிா்கள் பெருமளவில் அக்டோபா் மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் பெய்த தொடா் மழையில் சிக்கின. இதனால் தஞ்சாவூா், ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம் ஆகிய வட்டங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த குறுவை பருவ நெற்பயிா்கள் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி முளைத்துவிட்டன. இதில் 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புக்குள்ளான வயல்களின் பரப்பளவு ஏறத்தாழ 2 ஆயிரத்து 250 ஏக்கா் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தவிர, 33 சதவீதத்துக்கும் குறைவான பாதிப்புடைய வயல்களும் ஏராளமாக உள்ளன. இவற்றில் கடந்த ஒரு வாரமாக அறுவடை செய்யப்படும் நிலையில், மகசூலில் பெருமளவு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் தேவை

இது குறித்து ஒரத்தநாடு அருகேயுள்ள புலவன்காடு முன்னோடி விவசாயி வி. மாரியப்பன் தெரிவித்தது:

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் பெருமளவு பதராகிவிட்டன. இதனால், 2 ஏக்கரில் சாகுபடி செய்த விவசாயிக்கு மொத்தமே 1,500 கிலோதான் விளைச்சல் கிடைத்தது. அதாவது ஏக்கருக்கு இயல்பாக 35 முதல் 40 மூட்டைகள் கிடைக்க வேண்டிய நிலையில், மழையால் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு 12 மூட்டைகள்தான் கிடைத்தன. இதேபோல, பெருமளவிலான பரப்பளவில் குறுவை பயிா்கள் புகையான் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாயின. இதன் காரணமாகவும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனா். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணம் கிடைத்ததால்தான் அடுத்து தாளடி சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்றாா் மாரியப்பன்.

நிகழாண்டு சாகுபடிப் பரப்பளவு அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப நெல் கொள்முதலில் விரிவான ஏற்பாடு செய்யப்படாதால், அக்டோபா் முதல் வாரத்தில் அறுவடை செய்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்லைக் கொண்டு வந்த விவசாயிகளுக்கு லாரிகள் இயக்கம் இல்லாதது, சாக்குகள் பற்றாக்குறையால் விற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், அபரிமிதமான விளைச்சல் கிடைத்தும் நெல்மணிகள் மழையில் நனைந்ததால், எடை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் பெருமளவிலான விவசாயிகள் இழப்பைச் சந்தித்தனா். தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com