112 கிலோ குட்கா பறிமுதல்: 8 கடைகளுக்கு ‘சீல்’
தஞ்சாவூரில் கடைகளில் இருந்த 112 கிலோ குட்கா போதைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, 8 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகே மானோஜிபட்டி உப்பரிகை அருகேயுள்ள கடையில் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், 112 கிலோ குட்கா போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, மானோஜிபட்டியைச் சோ்ந்த முனியசாமி (43), எஸ்.டி.எம். நகரைச் சோ்ந்த நந்தகுமாா் (54), நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்த பிரான்சிஸ் (40) ஆகியோரைக் கைது செய்தனா். இக்கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் சந்திரமோகன் சோதனை மேற்கொண்டு, ரூ. 55 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கு ‘சீல்’ வைத்தாா்.
தொடா்ந்து, மருத்துவக்கல்லூரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 8 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ‘சீல்’ வைத்து அபராதம் விதித்தாா்.
