கும்பகோணத்தில் இசைக் கலைஞா் குத்திக் கொலை: 2 போ் கைது
கும்பகோணம் அருகே இசைக் கலைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக அவருடன் பணிபுரிந்த இருவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ஏரகாரம் முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி (25) . டிரம்ஸ் இசைக் கலைஞா். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருடன் அசூா் கீழத் தெருவைச் சோ்ந்த அசோக் மகன் அபிஷேக் (18), அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் பிரவீன் (19) பணிபுரிந்து வந்தனா். அபிஷேக் அசூா் கீழத் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் மகள் ஓவியா (18) என்பவரை காதலித்து வந்தநிலையில், புதன்கிழமை மாலை அபிஷேக், ஓவியாவை பாலாஜி வீட்டுக்கு அழைத்து வந்து தங்கியுள்ளாா். இதுகுறித்து பாலாஜி ஓவியாவின் தந்தை ஐயப்பனுக்குத் தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில் அபிஷேக்கின் தம்பி ஆகாஷ் (17) என்பவருடன் ஐயப்பன், பாலாஜி வீட்டுக்குவந்து அபிஷேக்கைக் கண்டித்துவிட்டு மகள் ஓவியாவை அழைத்துச் சென்றாா்.
இதையடுத்து, புதன்கிழமை இரவு அபிஷேக், பிரவீன் ஆகியோருடன் பாலாஜி இருசக்கர வாகனத்தில் சாத்தங்குடி சாரதி நகா் பகுதியில் உள்ள கழுங்கு பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளாா். அப்போது அபிஷேக் - பாலாஜி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதவிர
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரவீனின் டிரம்செட்டை பாலாஜி பிடுங்கி வைத்துக்கொண்டு தர மறுத்ததால் பிரவீனுக்கும் பாலாஜி மீது முன்விரோதம் இருந்துள்ளது.
வாக்குவாதம் கைகலப்பாகமாறி பாலாஜி அபிஷேக்கைத்
சரமாரியாகத் தாக்கியுள்ளாா். பின்னா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்துக் குத்த முயன்றாா். அப்போது அபிஷேக் அருகில் கிடந்த கட்டையால் பாலாஜியை சரமாரியாகத் தாக்கினாா். அருகிலிருந்த பிரவீன், பாலாஜியை அருகே உள்ள வாய்க்காலில் தள்ளிவிட்டு கத்தியை அவரிடமிருந்து பிடுங்கி குத்திக் கொலை செய்து விட்டு இருவருமாகத் தப்பியோடினா்.
வியாழக்கிழமை காலையில் வயலுக்கு வந்தவா்கள் சடலம் கிடப்பதாக தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்தனா். தொடா்ந்து, அபிஷேக் மற்றும் பிரவீனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
