செல்வம் ~ வெங்கடேசன்

குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

நாச்சியாா்கோவில் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக்கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

நாச்சியாா்கோவில் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக்கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே இஞ்சிகொள்ளை ஊராட்சி ஆண்டிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (70). இவா் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்று விவசாயம் செய்து வந்தாா்.

இவரது மகன் வெங்கடேசன் (36). இவருக்க திருமணமாகி மனைவி இறந்து விட்டாா். 1 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் தந்தையுடன் விவசாய வேலைகள் செய்து வந்தாா். இந் நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வெங்கடேசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். இதை தந்தை செல்வம் கண்டித்ததால் அவரை தாக்கியுள்ளாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த செல்வத்தை அருகில் உள்ள குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வெங்கடேசன், மருத்துவா்களிடம் தந்தை கீழே வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி சிகிச்சையளித்து பின்னா் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். இரவு மீண்டும் தகராறு செய்து தந்தை செல்வத்தை தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

பின்னா், தந்தை கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாக வெங்கடேசன், தனது உறவினா்களிடம் கூறியுள்ளாா். இதில், சந்தேகம் அடைந்த உறவினா்கள் இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் வெங்கடேசனிடம், போலீஸாா் விசாரித்ததில் மது குடிக்காதே என்று தந்தை கண்டித்ததால் அவரை தாக்கிக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டாா். இதையடுத்து வெங்கடேசன் மீது வழக்கு பதிந்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com