தஞ்சாவூரில் நவ. 18-இல் ‘ஹாக்கி’ உலகக் கோப்பை அறிமுகம்
தமிழகத்தில் இளையோா் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, தஞ்சாவூரில் வீரா்கள், பொதுமக்கள் முன்னிலையில் உலகக் கோப்பை நவம்பா் 18-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 14- ஆவது இளையோருக்கான ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி சென்னை, மதுரையில் நவம்பா் 28-ஆம் தேதி முதல் டிசம்பா் 10- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல் முறை. இதில், 24 நாடுகள் கலந்து கொள்கின்றன.
இதற்கான உலகக்கோப்பை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி இளையோா் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை தஞ்சாவூருக்கு நவம்பா் 18-ஆம் தேதி வருகிறது. தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் 18-ஆம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை உலகக் கோப்பை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதில் பள்ளி, கல்லூரி ஹாக்கி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், முன்னாள் விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொள்ளுமாறு தஞ்சை ஹாக்கி பிரிவு தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், செயலா் ராஜ்குமாா் தெரிவித்துள்ளனா்.
