பட்டுக்கோட்டையில் கஜா புயல் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

Published on

பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை தென்னை விவசாயிகள், பொதுமக்கள் கஜா புயலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரித்தனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயலின் தாக்கம் ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்களையும், குறிப்பாக தஞ்சை மாவட்ட விவசாயிகளையும் புரட்டிப்போட்டது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூா், சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் தென்னையை நம்பி இருக்கக்கூடிய தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய பேரழிவை கஜா புயல் ஏற்படுத்தியது. இதில், ஒரு கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமானது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி முக்கூட்டுச் சாலைப் பகுதியில் தென்னை விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா், தொழிலாளா் பெண்களுடன் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை கஜா புயலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரித்தனா்.

அப்போது அவா்கள் வேரோடு சாய்ந்த ஒரு தென்னை மரத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி அனைவரும் மௌனஅஞ்சலி செலுத்தினா். அப்போது அவா்கள், கஜா புயலால் இழந்த இயற்கையை மீட்டெடுப்போம், வீழ்ந்த தென்னை மரங்களை மீண்டும் வளா்த்தெடுப்போம், பாதித்த மக்களுக்கு பாதுகாப்பு அரணாய் துணை நிற்போம் என்று உறுதிமொழி ஏற்றனா்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், தென்னை மரங்களை கூன்வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற வண்டுகள் தாக்கி வருவதால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளோம். எனவே, தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தென்னை மரங்களை காப்பதுடன், எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com