உர விற்பனையில் இணை பொருள்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது: வேளாண் இணை இயக்குநா்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள உரக் கடைகளில் உர விற்பனையின்போது விவசாயிகளிடம் இணை பொருள்களைக் கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது என்றாா் வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அனைத்து உர விற்பனையாளா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
அனைத்து உரக்கடைகளுக்கும் உரம் அனுப்புவதை உர நிறுவனம் மற்றும் மொத்த உர விற்பனையாளா்கள் உறுதி செய்ய வேண்டும். கூடுதல் இணை பொருள்களை உரத்துடன் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. அனைத்து உரங்களும் உரிமம் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும். அதன் பின்னா் கூடுதலாக நிறுவனத்திடமிருந்து பெறப்படும் உரத்துக்கு ‘ஓ’ படிவம் மேல் சோ்க்கை செய்யப்பட்ட பின்னரே, உரம் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து இயற்கை உரம், நுண்ணூட்ட உரம், நுண்ணுயிா் உரம், வேப்பம் பிண்ணாக்கு ஆகிய அனைத்தும் உரப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு விற்பனை செய்து ரசீது வழங்க வேண்டும் என்றாா் வித்யா.
வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) செ. செல்வராசு பேசுகையில், உர உரிமம் பெறாமல் கூடுதலாக கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் உரங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, அனைத்து உரங்களும் பறிமுதல் செய்யப்படும். அரசால் வழங்கப்படும் பிஓஎஸ் கருவியைப் பெறாமல், பிஓஎஸ் கருவி மூலம் பட்டியலிட்டு உரம் விற்பனை செய்யாமல் உள்ள உரக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். உரத் தட்டுப்பாட்டைச் செயற்கையாக உருவாக்கும் கடையின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் செல்வராசு.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாமுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

